புதன், 20 மே, 2015

மாளாத காதல

The Fault in Our Stars (2014-hollywood)




இப்படத்தை பற்றியும் இப்படத்தின் மைய கருத்ததான கேன்சர் பற்றி பார்க்கும் முன் சில விஷயங்கள் 

பொதுவாக படம் பார்க்கும் பார்வையாளன் ஒரு 3 விசயங்களுக்குகாக படம் பார்ப்பான் .ஒன்று அந்த படத்தை பார்த்து அவன் தன் கவலை மறந்து சிரிக்க வேண்டும் .இன்னொன்று தனக்கு புடித்த கதாநாயகனை மாஸ் ஆக காட்ட வேண்டும் (அது எப்படி பட்ட குப்பை ஆக இருந்தாலும் ரசிப்பான் )
மூன்று அந்த படத்தை பார்த்து அவன் உணர்சிப்புர்வமாக மாறி அழ வேண்டும் .இதை கருத்தில் கொண்டுத்தான் அன்று முதல் இன்று வரை படங்கள் எடுக்க படுகிறது .அதில் சோக படங்கள் எப்போதுமே பார்வையாளனுக்கு சிறந்த படமாகவும் எப்போதும் நினைவில் இருப்பதாகவே இருக்கும் .அதை விமர்சகர்களும் பாராட்டுவார்கள் .கதாநாயக பிம்பத்தை அடியொற்றி வரும் படங்களை எல்லாம் ரசிகன் ஒரு வருடத்தில் மறந்து விடுவான் .இன்றும் பாச மலரோ ,நெஞ்சம் மறப்பதில்லையோ இல்லை வாழ்வே மாயம் போன்ற படங்களை பார்த்து அழுபவர்கள் உண்டு .இவ்வாறு சோக படங்களை மனதில் நிறுத்தி வைப்பது நம் மண்ணுக்கு உரித்தான ஒன்று . சினிமாவில் மட்டும் இல்லை நம் பண்டைய கால கலையான நாடகத்திலுமே வள்ளி திருமணத்தை விட அரிச்சந்திர புராணத்தை விரும்பவர்கள்தான் அதிகம் .
நம் தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் சோக படங்களை எடுக்கும் போது கதாநாயகனை அவனை சார்ந்த சமுதாயம் சார்ந்த பிரச்சினைகளால் அவனை சோக கதாபாத்திரமாக மாற்றினர் .அதாவது அவனுக்கு இருக்கும் வறுமை ,அவனை யாராவது ஏமாற்றுவது அவனுக்கு குடும்பத்தில் இருக்கும் சிக்கல்கள் இப்படித்தான் சோக படங்களை உருவாக்கினார்கள் ஆனால் கதாபாத்திரத்துக்கு ஒரு குணபடுத்த முடியாத கொடிய நோய் வந்துள்ளது அதனால் அவன் வாழும் காலம் குறைவு என்று ஒரு குனபடுத்த முடியாத நோய் அதனால் இறக்க போகும் நாயகன் என்று ஒரு புதிய சோக படமாக வந்தது 1962ல் ஸ்ரீதர் இயக்கத்தில் முத்து ராமன் ,தேவிகா ,கல்யாண் குமார் இயக்கத்தில் வெளிவந்த நெஞ்சில் ஓர் ஆலயம் .அந்த திரைபடத்தில் முத்து ராமன் கதாபாத்திரம் குணபடுத்த முடியாத நோய்க்கு ஆளாகும் .அந்த பாத்திரத்தின் மீது ரசிகர்கள் பரிவு ஏற்பட்டதோடு ரசிகர்களால் மறக்க முடியாத பாத்திரமாகவும் இருந்தது .அதில் இருந்து அது போன்று பல படங்கள் வந்தாலும் அதே போன்று தாக்கத்தை ஏற்படுத்தியது 1982ல் கமல்ஹாசன் ,ஸ்ரீதேவி நடித்து வெளிவந்த வாழ்வே மாயம் திரைப்படம்
 (இது 1981ல் வெளிவந்த தெலுங்கு படமான ப்ரேமிபிசெகம் என்ற படத்தின் ரீமேக் ஆகும் )
இதில் கமல்ஹாசன் கேன்சர் நோயாளி ஆக நடித்த படம் .கேன்சர் என்றால் என்ன என்பதை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்த  படம் .அதிலிருந்து கேன்சரை வைத்து பல படங்கள் எடுக்கப்பட்டு விட்டன .(அஜீத் நடித்த படம் கூட ஒன்று உள்ளது ஆனால் அதன் பெயர் ஞாபகம் வரவில்லை )
ஆனால் எதுவுமே வாழ்வே மாயம் போன்று தாக்கத்தை ஏற்படுத்தவில்லை .
இது போன்று கேன்சரோ இல்லை குனபடுத்த முடியாத நோயை வைத்து எடுக்கப்பட்ட படங்கள் எல்லாம் ஒரே டெம்ப்ளேட்யை பயன்படுத்தியது தான் காரணம் . இது போன்ற படங்களில் எல்லாம் முடிவு ஏற்கனவே ரசிகனுக்கு தெரியும் என்றாலும் முடிவுக்கு முன் இடைப்பட்ட பகுதிகளில் எல்லாம் அழுவாச்சி காவியமாக இருந்தது தான் ரசிகனுக்கு சலிப்பை ஏற்படுத்தியது .அவர்களும் அழுது கழுத்தை அறுத்துக்கொண்டு நம் கழுத்தையும் அறுப்பார்கள் .இதில் ஓரளவு வித்தியாசமாக எனக்கு தெரிந்தது  2 படங்கள் 

அதில் ஒன்று  பாசில் இயக்கத்தில் நதியா ,பத்மினி நடிப்பில் 1985ல் வெளிவந்த பூவே பூச்சுடவா திரைப்படம் .இந்த படத்தில் நாயகிக்கு கேன்சர் கிடையாது ஆனால் குணபடுத்த முடியாத நோய் ஒன்று இருக்கும் .ஆனால் அவள் தனக்கு வியாதி இருக்கிறது என்றோ சொல்லி அழ மாட்டாள் .இறுதி காட்சியில் தான் தெரியும் அவளுக்கு வியாதி இருக்கிறது என்று .படம் முழுதும் அந்த கதாபாத்திரம் ஒரு பாஸ்டிவ் எனர்ஜியோடு இருக்கும் .
அதே போன்று இன்னொரு படம்



கரன் ஜோகர் கதை திரைக்கதையில் ஷாருக்கான் ,சைப் அலி கான் ,ப்ரித்தி ஜிந்தா நடிப்பில் 2003ல் வெளியான கல் ஹோ நா ஹோ திரைப்படம் .அதே வாழ்வே மாயம் கதை தான் .ஆனால் படத்தில் எந்த காட்சியிலும் ஷாருக்கான் பாத்திரம் யாரடிமும் தனக்கு நோய் இருப்பதாக சொல்லி அழாது .மாறாக எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதாக காண்பிக்கப்படும் .ஷாருக்கானின் சிறந்த நடிப்பில் இப்படமும் ஒன்று .
இது போன்று கேன்சரோ இல்லை மற்ற குனபடுத்த முடியாத வியாதியோ அந்த பாத்திரத்தை பாஸ்டிவ் எனர்ஜியோடு காட்டும் போது ரசிகனுக்கும் ஒரு மகிழ்ச்சி கிடைக்கும் அதே நேரத்தில் கிளைமாக்சில் அந்த பாத்திரத்தின் மீது ஒரு பரிவும் எற்படும் அதைத்தான் The Fault in Our Stars படமும் செய்துள்ளது .
சரி இனி அதை பற்றி
1989ல் வெளிவந்த மணிரத்னம் இயக்கத்தில் நாகர்ஜுன் நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படமான கீதாஞ்சலி படத்தின் கதையை கிட்டத்தட்ட ஒட்டி வந்துள்ள படம்தான் இது .அதில் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் கேன்சர் இருக்கும் இருவரும் காதலிப்பார்கள் .



சரி தெரிந்த கதை அதே கேன்சர் ,   முடிவு தெரியும் என்று ஒரு அரை மனதோடு தான் படம் பார்த்தேன் .ஆனால் இது மற்ற கேன்சர் படங்களை போல் இல்லை .கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் கேன்சர் என்றாலும் படம் முழுதும் அவர்கள் ஒரு பாஸ்டிவ் எனர்ஜியோடு  தான் இருக்கிறார்கள் .
குறிப்பாக கதாநாயகி எப்போதும் சிரித்த முகத்தோடு தான் இருக்கிறாள் .அதே போன்று தான் கதாநாயகனும் எதையும் எளிதாக எடுத்து கொள்கிறான் .
கதாநாயகி தன் காதலை நாயகனடிம் வெளிபடுத்தும் காட்சி மிகவும் அருமையாக இருந்தது .
மேலும் இதில் கதாபாத்திரங்கள் குறைவு என்றாலும் சலிப்பு தட்ட வில்லை
இப்படம் ஜோஸ் புன்னே என்பவரின் நாவலை தழுவி எடுக்கப்பட்டது .
இப்படம் மெதுவாகத்தான் செல்கிறது .ஆனால் எந்த இடத்திலும் திரையை விட்டு கண்கள் செல்லவில்லை .
சில படங்கள் எப்படா முடியும் என்று தோன்றும் ஆனால் இது அப்படி இல்லை மெதுவாக சென்றாலும் அந்த படத்துடுன் இன்னும் கொஞ்ச நேரம் ஒன்றி இருக்கலாம் என்று தான் தோன்றியது .
தமிழில் அன்பே சிவம் படத்தில் தான் எனக்கு இது போன்ற உணர்வு ஏற்பட்டது .
முடிவாக இன்றைய ஹாலிவுட் படங்களில் காதல் என்றாலே பார்த்த உடன் முத்தமிட்டு கொண்டு அடுத்த வினாடியில் எதவாது ஒரு அறைக்கு சென்று விட்டு அங்கே இருக்கும் பொருள்களை எல்லாம் தட்டிவிடுகிறேன் என்ற பெயரில் உடைத்து விட்டு ஒரு செக்ஸ் காட்சியை வைத்து விட்டு பின்பு இது மிக சிறந்த காதல் திரைப்படம் என்று சொல்லும் ஹாலிவுட் உலகில் இது போன்று உண்மையிலே இதய பூர்வமான திரைப்படங்களை பார்ப்பது புதிது .
சிறந்த காதல் திரைப்படங்கள் என்று ஒரு 10 படங்களை என்னை சொல்ல சொன்னால் அதில் இப்படம் நிச்சியம் இடம் பெறும் .

எனவே அனைவரும் தாராளமாக இப்படத்தை பார்க்கலாம் .


1 கருத்து: